வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி விவசாயிகள், நிவாரணம் வழங்க கோரி தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கைப் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கருகிய பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், நீரின்றி தரிசாக விடப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும், வேலையிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.