பஹ்ரைன் நாட்டில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த
கார் ஓட்டுநர் ஒருவர் பலியானார். தலைநகர் மனாமாவை அடுத்த அடில்யா, குதைபியா
மற்றும் ஹுரா பகுதிகளில் அடுத்தடுத்து 5 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 3
பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய தூதரக அலுவலகம் அமைந்துள்ள குதைபியா பகுதியில் நிகழ்ந்த
குண்டுவெடிப்பில் ஆசியாவைச் சேர்ந்த இருவர் பலியாகினர். இதில் ஒருவர்
இந்தியர் என கூறப்பட்ட நிலையில் உயிரிழந்தது தஞ்சாவூர் மாவட்டம்
அய்யம்பேட்டை திருநகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டின் குதைபியா பகுதியில் 10 ஆண்டுகளாக கார்
ஓட்டிவந்த திருநாவுக்கரசு, நேற்று கார் அருகே கிடந்த பையை காலால்
தள்ளிவிட்டபோது, அதில் இருந்த குண்டு வெடித்துள்ளது. இச்சம்பவத்தில்
உயிரிழந்த திருநாவுக்கரசு 30 வயதே ஆனவர். இவருக்கு மனைவியும் இரண்டு
குழந்தைகளும் உள்ளனர். குண்டுவெடிப்பில் பலியான திருநாவுக்கரசுவின் உடலை,
சொந்த ஊர் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.