கோவில்களின் நகரமான கும்பகோணத்தில் பழங்காலத்து ஆலயங்கள்

 
        படிக்கட்டுகளில்'ஏறி'கோவில்களுக்குள் செல்வது வழக்கம். ஆனால் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த பல கோவில்களுக்கு, படிக்கட்டுகளில் 'இறங்கி' செல்ல வேண்டியிருக்கிறது.
   கோவில்களின் நகரமான கும்பகோணத்தில் பழங்காலத்து ஆலயங்கள் சில படிப்படியாக மண்ணுக்குள் புதைந்து வருகின்றன. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோவிலில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிய சிலைகள் உள்ளன.
    2004ஆம் ஆண்டு உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோவில், யுனெஸ்கோ மற்றும் தொல்லியல் துறை ஆகியவற்றால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கும் அளவிற்கு இந்தக் கோவில் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் கோவிலைச்சுற்றி அவ்வப்போது அமைக்கப்படும் தார் மற்றும் கான்கிரீன்ட் சாலைகளே என்கின்றனர் மக்கள்.
எட்டடி உயரத்தில் சாலைகள்
    மராத்திய மன்னர்களால் கட்டப்பட்ட சக்கரபாணி கோவிலின் தரை மட்டத்தைவிட, சுற்றுச் சாலைகள் 8 அடி உயர்த்தப் பட்டதால், கோவிலின் தெற்கு வாசல் முழுவதும் அடைபட்டுவிட்டது. ராஜ கோபுரத்தின் வழியாகவும் சிரமப்பட்டுதான் கோவிலுக்குள் செல்லவேண்டியிருக்கிறது.இதேபோல் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராமசுவாமி கோயிலில், பிரகார மட்டத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்படும் தளங்களால், தூண்களில் வடிவமைக்கப்பட்டிருந்த ஏராளமான சிலைகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.
பாதுகாக்க நடவடிக்கை தேவை
   வழிபாட்டிற்காக அமைக்கப்பட்ட கோவில்கள், மழைவெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் மக்கள் சென்று தங்கும் வகையில்தான் உயரமாகவும், பிரம்மாண்ட பிரகாரங்களோடும் அமைக்கப்பட்டன. அவற்றை நாம் பாதுகாக்கத் தவறியதால், மண்ணில் புதையுண்டு போகும் நிலை அரங்கேறி வருகிறது. அதனால், புதிய சாலைகளை அமைக்கும்போது அதன் மட்டத்தை உயர்த்தாமல், முதலில் அமைக்கப்பட்ட சாலைகளை அகற்றிவிட்டு அமைத்தால் மட்டுமே பழமையும் பெருமையும் வாய்ந்த கோவில்களை மண்மூடிவிடாமல் பாதுகாக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.